திருச்சியில் பதவி கிடைக்காத ஆத்திரம்; அதிமுக கூட்டத்தில் ரகளை
திருச்சியில் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அதிமுக கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையால் பரபரப்பானது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. அப்போது மண்டபத்திற்குள் மஞ்சள் நிறக்கொடியுடன் புகுந்த 30 பேர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த சேர்களை எடுத்து அடிக்க ஆரம்பித்தனர்.
இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி வந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் தகராறு செய்தவர்கள் வெளியேறிய பின்னர் கூட்டம் நடந்தது.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:
அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் பதவியை மீனவர் அணிச் செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகராறு செய்தனர். மேலும், முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.