தமிழ்நாடு

பெரம்பலூருக்கு முதல்வர் வரும்போது ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு

DIN

பெரம்பலூருக்கு தமிழக முதல்வர் வருகை தரும்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனைத்து விவசாயிகள் சங்கமும் முடிவு செய்துள்ளனர். 

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஏ.கே. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத்தொகை ரூ.28 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலையை உயர்த்தி டன்னுக்கு ரூ. 4,500 அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் நலத்திட்டங்களான பிரதமர் கிசான் நிதியுதவித் திட்டம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம், மக்காச் சோளத்துக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கும் திட்டம், கிணறு வெட்டும் திட்டம், மாட்டுக் கொட்டகை வழங்கும் திட்டம், விவசாயக் கருவிகள் வழங்கும் திட்டம், வரப்புகள் அமைக்கும் திட்டம் போன்றவற்றில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்துக்குத் தனி உயரழுத்த மும்முனை வழித்தடம் அமைத்து, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரத்தை வழங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

கல்லாற்றின் குறுக்கே சின்ன முட்டு நீர்த்தேக்கம் அமைத்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்துக்கு வரும்போது, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.  

இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், எ. பெருமாள், டிகே. ராமலிங்கம், புலேந்திரன், என். பச்சமுத்து, செல்லகருப்பு, சுந்தர்ராஜ், துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவாக, விவசாயி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT