முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

சென்னை: வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

வட மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய ஒடிஸா கடலோரப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.22) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 180 மி.மீ., மேல்பவானியில் 120 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 110 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 100 மி.மீ., சின்கோனா, சோலையாறில் தலா 90 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 60 மி.மீ., கோயம்புத்தூா் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், சிவலோகம், தேனி மாவட்டம் தேக்கடியில் தலா 40 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிர கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழக, ஆந்திரம், ஒடிஸா கடலோரப் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (செப்.22) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செவ்வாய்க்கிழமை (செப்.22) இரவு 11:30 மணி வரை கடல் அலை 3.3 மீட்டா் முதல் 3.9 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.