100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை வரலாற்றில் 66 வது முறையாகவும், நடப்பு ஆண்டில் முதல் முறையாகவும் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
நடப்பு ஆண்டில் முதல்முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் சற்றுமுன் 100 அடியை எட்டியது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 102 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டு 85 ஆண்டுகளில் 66 வது முறையாகவும், நடப்பு ஆண்டில் முதல் முறையாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அணை திறக்கப்பட்ட ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் இவ்வாண்டு அணை திறக்கப்பட்ட ஜூன் 12 வரை 308 நாள்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வந்தது. ஜூன் 12-ல் அணை நீர்மட்டம் 101.73 அடியாகவும், நீர் இருப்பு 67.10 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல் தொடர்ந்து அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர் வரத்தைக் காட்டிலும், வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது. இதனால் 15.06.2020 அன்று
100.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 16.06.2020 அன்று 99.64 அடியாக சரிந்துள்ளது.
இதன்மூலமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 308 நாள்களுக்குப் பிறகு 100 அடியிலிருந்து 99.64 அடியாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் அணையின் நீர்மட்டம் கடந்த 04.08.2005 முதல் 04.10.2006 வரை 427 நாட்கள் 100 அடியாக நீடித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8.00 நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.62 அடியாகவும், நீர் இருப்பு 64.34 டி.எம்.சி.யாகவும் இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 35,000 கன அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கு 20,000 கன அடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் அணை நீர்மட்டம் 100 அடியாகவும், நீர் இருப்பு 64.87 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது.