சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது பாஜக: தொல்.திருமாவளவன்
சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி என்றார் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன்.
தமிழ்நாடுசமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது பாஜக: தொல்.திருமாவளவன்
சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி என்றார் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன்.
சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி என்றார் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன்.
அரியலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் கு.சின்னப்பாவை ஆதரித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர், மேலும் பேசியது:
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்பதால், தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விடலாம், திமுகவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்து விடலாம் என பாஜக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு மோதக் கூட பாஜகவுக்கு தகுதியில்லை. இவர்களால் திமுகவுடன் எவ்வாறு மோத முடியும். அதனால் தான் அதிமுக, பாமக முகமூடி போட்டுக்கொண்டு பாஜக வருகிறது.
தமிழக மக்கள் எப்படிப் போனால் என்ன, தமிழகத்தில் ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும். கொள்ளையடித்துச் சேர்த்த சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். வருமானவரிச் சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால் தான் பாஜகவுடன் அதிமுகவும், பாமகவும் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், திமுக, பாஜகவின் முகத்திரையைக் கிழிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான தோழமை கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து எதிர்க்கிறது. ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்த வருமானவரித்துறை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டியது தானே. திமுகவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவே இந்த சோதனை.
எப்படியும் திமுக கூட்டணி உடைந்து விடும். 6 சீட்டுக்கு திருமாவளவன் ஒத்துக்கொள்ளமாட்டார். அதனால் திமுக கூட்டணி உடையும் என அதிமுக கூட்டணியினர் நினைத்தனர். 30 ஆண்டுக்காலம் அரசியலில் இருக்கிற நாம், அதிமுக, பாஜக என்ன நினைக்கிறது. என்ன எதிர்பார்க்கிறார்கள் என உணர தெரியாதவர்களா விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. பாஜகவை எதிர்த்தே திமுக கூட்டணியில் 6 சீட்டுக்கு முதல் கையெழுத்து இட்டேன். இதனை நான் ஏற்காமல் ஆத்திரப்பட்டு வெளியே வந்திருந்தால், நமக்கு எந்த லாபமும் கிட்டப்போவதில்லை. அதேநேரத்தில் திமுக கூட்டணி சிதறி, அது அதிமுகவுக்கு சாதகமாக மாறிவிடும். தமிழகத்தில் பாஜகவுக்கு வழிவிட்டது போலாகிவிடும். தமிழகத்தில், பாஜவுக்கு இடமில்லை என்ற நிலை ஏற்படவேண்டும்.
தமிழகத்தில் அவர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவேண்டும். பிரதமர் வேட்பாளராக மோடி நின்றபோதே, மோடி மோசமானவர் என்றேன். அவர் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டுக்கு பெரும் தீங்கு ஏற்படும் என்றேன். அவர், குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லீம்கள் 3,000 பேரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கொன்றனர். நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, அந்த சிசுவைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தனர். அதன்பிறகுதான் மோடி தேசிய அளவில் பெரிய தலைவராக அறியப்பட்டார். அதன்பின் தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் அவரை தேடிக் கண்டறிந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைச் செல்லாது என எடுத்தேன் கவிழ்த்தேன் என அறிவிப்பை வெளியிட்ட ஒரே பிரதமர் இந்திய நாட்டுப் பிரதமர் மோடிதான். கருப்புப் பணத்தை கொண்டு வந்து மக்கள் கணக்கில் செலுத்துவேன் என்றார். இதுவரை செலுத்தினாரா இல்லை. அண்ட புழுகர், ஆகாச புழுகர் என மோடிக்கு விருது வழங்கலாம். பாஜக ஆபத்தான பயங்கர வாதக் கொள்கைக் கொண்ட கட்சி. ஆணவக் கொலைகளை தடுக்க முன்வராத கட்சி, சமூக நீதிக்கு எதிரான கட்சி. அவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. மாறாக மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்யக்கூடியவர்கள்.
அம்பேத்கருக்கு பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் காந்தியடிகளையே சுட்டுக்கொண்றது ஆர்எஸ்எஸ் இயக்கம். காமராஜர் தங்கியிருந்த வீட்டுக்கு தீ வைத்தவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். எனவே. சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார்.
அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க முன்வராத அமைப்பின் வழிவந்த பாஜக, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. எனவே தான் பாஜகவை எதிர்க்கிறேன். பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாததற்கு முதல் காரணம் நம்மிடையே நிலவும் தமிழ் மொழி உணர்வு தான். அது மேலோங்கி இருக்கும் வரை பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. தற்போது கூட தமிழகத்தின் பெயரை ஷதட்சணபிரதேசம் என மாற்ற முயற்சி செய்துவருகின்றனர். ஷதட்சண என்றால் இந்தியில் தெற்கு என அர்த்தம். எனவே தெற்கு பிரதேசம், என மாற்ற முயற்சிக்கின்றனர். அதற்கு இடம் தரக்கூடாது. மொழியோடு பெயர் கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு மட்டும் தான். அண்ணா இந்த பெயரை தேர்ந்தெடுத்தார் என்பதற்காகவே கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் அவரது சிலையை சில மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
மோடிக்கு தமிழ் தெரியாது. நமக்கு இந்தி தெரியாது. அதுதான் நமக்கு நல்லது. பாஜகவை முழுதாக நிராகரிக்கவேண்டும். நம்மிடம் இருந்த சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர். மாநிலக் கட்சிகள் இருக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக மற்றும் பாமகவை பாஜக விழுங்கிவிடும். பாஜகவுக்கு தமிழகத்தில் 3 சின்னம். அது தாமரை, இரட்டை இலை, மாம்பழம். இந்த சின்னங்களுக்கு நீங்கள் வாக்களித்தால் பாஜகவுக்கு வாக்களித்ததாகத் தான் அர்த்தம். எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக தற்போது தமிழகத்தில் இல்லை. எனவே அதிமுக கூட்டணியை ஆதரித்தால் தமிழகத்தை மோடிதான் ஆட்சி செய்வார் என்றார் அவர். தொடர்ந்து அவர், உடையார்பாளையத்தில் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.