தமிழ்நாடு

வெங்கடேசப் பெருமாள் வேஷத்தில் நித்தியானந்தா: முகநூலில் வெளியிட்ட படங்களால் கடும் சர்ச்சை

DIN


எப்படி கரோனா என்றாலே அச்சம் பரவுகிறதோ அப்படித்தான் நித்தியானந்தா என்றாலே சர்ச்சையும் பரவிவிடும். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளாலேயே 'புகழ்' பெற்றுவிட்ட நித்தியானந்தாவின் வெங்கடேசப் பெருமாள் வேஷம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேசப் பெருமாள் போன்று சங்கு, சக்கரம், கொள்ளை கொள்ளும் நகைகளுடன் ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும் நித்யானந்தா, கைலாசா நாட்டுக்கு வருமாறு தனது பக்தர்களுக்கு அன்பு அழைப்பை விடுத்துள்ளார். கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக இ-கடவுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

உலகின் ஒரே ஒரு இந்து நாடான கைலாசாவை ஆதரிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்தப் புகைப்படங்களுக்கு கடுமையான கண்டனங்களும், விமரிசனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. பெருமாள் பக்தர்கள் இந்தப் புகைப்படங்களுக்கு எதிர்ப்பையும் பதிவிட்டுள்ளனர்.

பெங்களூருவில் பிடரி ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா, பெண் சீடர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்தல், பாலியல் புகார், கொலை வழக்கு என பல்வேறு வழக்குகளில் சிக்கினார். 2010-ஆம் ஆண்டு நித்யானந்தாவின் விடியோ ஒன்று தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி, அப்போதுதான் அவர் 'பெரும்' புகழுக்குச் சொந்தக்காரரானார்.

அதோடு நிற்கவில்லை அவர்து சர்ச்சைகளின் வரலாறு. பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன. ஆமதாபாத் நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்யானந்தா, நாட்டிலிருந்து வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது மட்டும்தான் தெரியாது. ஆனால், நாள்தோறும் அவரது பக்தர்களுக்கு தனது அற்புத சக்திகளை விளக்கும் விடியோவை வெளியிட்டு, பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வந்தார். 

இந்த நிலையில்தான், யாருமே எதிர்பாராத வகையில், பலரது கனவாக இருக்கும் ஒரு வேலையைச் செய்தார்.

ஆம், ஒரு தீவை விலைக்கு வாங்கி, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதற்கு பிரதமராக தன்னையே பிரகடனமும் செய்து கொண்டார். பிரதமரான பிறகும் கூட தினந்தோறும் காணொலியில் வந்து அவரது பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் பணியை செவ்வனே செய்து வருகிறார்.

நாட்டை உருவாக்கியதோடு நின்றுவிடவில்லை. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நேரத்தில், கைலாசா நாட்டின் ரிசர்வ் வங்கி தயார் என்றும், நாணயங்கள் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்து, அன்றைய தினம் கைலாசா நாட்டின் நாணயங்களையும் வெளியிட்டு அதிர்ச்சிக்கே அதிர்ச்சி கொடுத்தார்.

இதற்கெல்லாம் மேலாக தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டார். கைலாசா நாட்டின் பிரதமர் என்று அறிவித்துக் கொண்டதற்கு பலரும் விமரிசனங்களை முன் வைத்துக் கொண்டிருந்த போது அவர்களை எல்லாம் நக்கலடிக்கும் வகையில், கைலாசாவின் பிரதமர் என்று நான் என்னை உரிமைக் கொண்டாடிக் கொள்வதை எதிர்ப்பவர்களே, அதற்கு முன்னதாக இருந்தே நான் என்னை கடவுள் என்று உரிமைக் கொண்டாடி வருகிறேனே என்று தெய்வீக சிரிப்புடன் பதிலளித்திருந்தார்.

இவ்வாறு தன் மீது கல்லெறிபவர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல், வந்து விழும் கற்களைக் கொண்டே தனக்கான ஒரு பீடத்தை எழுப்பிக் கொண்டு வந்திருக்கும் நித்யானந்தா, இவ்வளவு நாளும் சிவபெருமானை சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், திடிரென தற்போது பெருமாள் வேஷம் போட்டுள்ளார்.

இது அவரது பக்தர்களுக்கே ஆச்சரியத்தை எழுப்பியிருக்கும் நிலையில், ஏழுமலையானின் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதில் விந்தை ஒன்றும் இருக்காதில்லையா?

ஆம், ஏப்ரல் 8-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில், கைலாசாவின் பிரதமர் நித்யானந்தா, வெங்கடேசப்  பெருமாள் வேஷமிட்டு வெளியிட்ட புகைப்படங்கள் கடும் விமரிசனங்களையும் கண்டனங்களையும் எழுப்பி வருகிறது.

வெங்கடேசப் பெருமாள் என்றால்.. அவ்வளவு அதி அற்புத நகைகளையும், தலைக் கீரிடத்தையும் அணிந்து கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். கண்ணை மூடியபடி, கண்ணைத் திறந்து என அவர்கள் தனத பக்த கோடிகளுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.

தனது பக்தர்களை பக்தி பரசவத்தில் ஆழ்த்தும் புகைப்படங்களால் எழுந்திருக்கும் கண்டனங்களுக்கு நிச்சயம் அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

புகைப்படங்கள்: நித்தியானந்தா முகநூல் பக்கத்திலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT