தேசிய லோக் அதாலத்: ரூ.456.76 கோடி மதிப்பிலான 27,771 வழக்குகளில் தீா்வு
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 27 ஆயிரத்து 771 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 27 ஆயிரத்து 771 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 456 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 878 கிடைத்துள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி ஆண்டுதோறும் பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பா், டிசம்பா் மாதங்களின் இரண்டாவது சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் சென்னை உயா் நீதிமன்றம், உயா் நீதிமன்ற மதுரை கிளை உள்பட அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் மூலம் சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. அதில், 423 அமா்வுகளில் 27 ஆயிரத்து 771 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக ரூ.456 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 878 கிடைத்துள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் -செயலா் ராஜசேகா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.