முகப்பு
தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையால் மூவர் காயம்: மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க நடவடிக்கை

குடியாத்தம் அருகே 3 பேரை காயப்படுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். வீட்டினுள் அடைக்கப்பட்டுள்ள சிறுத்தையை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை
பகிர்:

குடியாத்தம்:  குடியாத்தம் அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள்
நுழைந்த சிறுத்தை, 3 பேரை கடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டுக்குள் பிடிபட்ட சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். விரைந்து அதனை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் ஊராட்சிக்குள்பட்டது கலர்பாளையம்
கிராமம். புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை ஒன்று
அக்கிராமத்துக்குள் நுழைந்துள்ளது.

அதன் சத்தம் கேட்டு, அருகே உள்ள வீட்டியிலிருந்து பிரேமா(28) வெளியே வந்துள்ளார். அவரை சிறுத்தை தாக்கியுள்ளது.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது கணவர் வேலாயுதம்(42),
மகன் மனோகரன்(20), மகள் மகாலட்சுமி (15) ஆகியோர் வெளியே வந்துள்ளனர்.

அவர்களையும் சிறுத்தை தாக்கி, விட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்ததும், சமயோசிதமாக செயல்பட்ட பிரேமா
வீட்டின் கதவை சாத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டார்.

அதற்குள் கிராம மக்கள் அங்கு கூடினர்.  காயமடைந்த பிரேமா, மனோகரன், மகாலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் பேர்ணாம்பட்டு வனத்துறையினர், காவல்துறையினர் அங்கு வந்தனர். வீட்டுக்குள் சிக்கியுள்ள சிறுத்தை மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. 

சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஓசூரிலிருந்து கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவர் குழு நிகழ்விடம் வந்தது.

அங்கு ஏராளமான மக்கள் கூடியதால், சத்தம்கேட்டு, சிறுத்தை அறையின் உள்புறம் பதுங்கியுள்ளது. அறையிலிருந்து வெளியே வந்தால், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவர் குழு தயார் நிலையில் இருந்தனர்.

தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் பலனாக சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து சிறுத்தையை வெளியே எடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.