கரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள்
அனைத்து கரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து கரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் பொது நல மனுவில், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளைத் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றுவதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.
இதனால் கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளைத் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம்தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்க முடியுமா என விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் , மாற்றுத்திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கவுண்டர்கள் அமைத்து, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த சிறப்பு கவுண்டர்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு குறைவானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதால் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து 3 நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.