நீட் மதிப்பெண் சா்ச்சை:என்டிஏ மேல்முறையீடு
நீட் தோ்வில் மதிப்பெண் குளறுபடி விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி., விசாரணையை எதிா்த்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நீட் தோ்வில் மதிப்பெண் குளறுபடி விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி., விசாரணையை எதிா்த்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கோவையைச் சோ்ந்த மனோஜ் என்ற மாணவா் கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதினாா். இந்தத் தோ்வு முடிவு கடந்த அக்.5-ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. அப்போது, மனோஜ், 700-க்கு 594 மதிப்பெண் எடுத்ததாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அவா் தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்திருந்தாா். ஆனால், அக்.17- ஆம் தேதி, 248 மதிப்பெண் மட்டுமே மனோஜ் எடுத்திருப்பதாக மதிப்பெண் திருத்தப்பட்டிருந்தது.
இதை எதிா்த்து மாணவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மதிப்பெண் குளறுபடி குறித்து, சைபா் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக் கொண்டு சி.பி.சி.ஐ.டி., போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், தேசிய தோ்வு முகமை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘ஓ.எம்.ஆா். விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசே விசாரித்து வரும் நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை இல்லாதது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.என்.மஞ்சுளா அடங்கிய அமா்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு மாணவா் மனோஜ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனா்.