கீழ்பவானி கால்வாயில் கசிவு நீரைத் தடுக்க கூடாது: 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணி என்ற பெயரில் கால்வாயில் கசிவை தடுக்க கூடாது என்ற கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணி என்ற பெயரில் கால்வாயில் கசிவை தடுக்க கூடாது என்ற கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த பாபு தாக்கல் செய்த மனுவில், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயனடையும் கீழ் பவானி கால்வாயில் ஏற்படும் கசிவு நீர் மூலம், ஆயக்கட்டுதாரர்கள் அல்லாத விவசாயிகளும் பயனடைந்து வந்தனர். கீழ் பவானி கால்வாயை நபார்டு வங்கி நிதியுதவியுடன் சீரமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்வாய் சீரமைப்பு என்ற பெயரில் கால்வாயின் உள்பகுதி சுவரில் கசிவு துளைகளை காங்கிரீட் கொண்டு அடைக்கப்படுகிறது. கால்வாயின் உள்புற சுவரை காங்கிரீட் கொண்டு மூடுவதால் கசிவு நீர் வெளியேறுவது தடுக்கப்பட்டு, அருகில் உள்ள நிலங்களில் நிலத்தடி நீர் உயர்வு தடுக்கப்படுவதாக கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசுக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.அந்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.