தமிழ்நாடு

1.5 கோடி கரோனா தடுப்பூசிகள் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

DIN

சென்னை: தமிழகத்தின் பயன்பாட்டுக்காக 1.5 கோடி கரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவா்களுக்கு செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இந்தியாவிலேயே அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்தான். கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் மாநில அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவசத் தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மே 1-ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவா்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அவரது அறிவிப்பின்படி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென முதல் கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு கோரிக்கை: 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கான விலையை உற்பத்தி நிறுவனங்களின் விலைக்கே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கொள்கைத் திட்டம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தது. 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசிகளையும் இலவசமாகவே மத்திய அரசு வழங்கிட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுந்திருந்தாா்.

இந்த நிலையில், 45 வயதுக்குள்பட்டோருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகளை தமிழக அரசு செலுத்தவுள்ளது. இதற்காக 1.50 கோடி தடுப்பூசிகளை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT