காலமானார்: சித்த மருத்துவர் க.வேங்கடேசன்
மூலிகைமணி இதழின் ஆசிரியரும், மூத்த சித்த மருத்துவருமான டாக்டர் க.வேங்கடேசன் (வயது 75) ஞாயிறு அதிகாலை காலமானார்.
மூலிகைமணி இதழின் ஆசிரியரும், மூத்த சித்த மருத்துவருமான டாக்டர் க.வேங்கடேசன் (வயது 75) ஞாயிறு அதிகாலை காலமானார்.
வடாற்காடு மாவட்டத்தில் காப்புக்கார வைத்திய பாரம்பரியத்தில், ஐந்தாம் தலைமுறை சித்த மருத்துவராகப் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னை பல்கலைக்கழகத்தில் “தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்” எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு கையேடு தமிழ் மருத்துவ வரலாற்றுக்கு மிக முக்கிய பங்களிப்பாகும். அவருடைய ஆய்வேடு உலகெங்கும் பல ஆய்வாளர்களுக்கு இன்றும் வழிகாட்டியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சித்த மருத்துவ வாரியத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அரசு சித்த மருத்துவ கல்லூரியையும், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் நிறுவியதில் இவரது பங்கு முக்கியமானது. பாரம்பரியமிக்க இம்ப்காப்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் பல்கலைக்கழக சித்த மருத்துவக் குழு உறுப்பினராக தொண்டாற்றினார். இப்பல்கலைக்கழகத்தில் உள்ள சித்தமருத்துவத்துறை (Department of Siddha) இவருடைய முன்னெடுப்பில் உருவாகியது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும் சித்த மருத்துவக் குழுவில் பங்கேற்றிருந்தார்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, அவரது அகர முதலி திட்ட இயக்கத்தில் உறுப்பினராக பணியாற்றினார்.
சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்டு தமிழகம் தடுமாறி, தவித்த சமயத்தில் “சமய சஞ்சீவியாக” நிலவேம்பு குடிநீர் பயன்பாட்டினை அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., சுகாதாரத்துறை செயலாளர் திரு.வி.கே.சுப்புராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு எடுத்துரைத்து தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நிலவேம்பு குடிநீர் அரசு இயந்திரத்தின் மூலம் சென்றடையச் செய்தார்.
கரோனா பெருந்தொற்று காலங்களிலும் தனது வழிகாட்டுதல்களை மூலிகைமணி இதழின் மூலமும், பத்திரிகைகளில் கட்டுரைகளின் மூலமும் அரசுக்கும், மக்களுக்கும் வழிகாட்டி வந்தார்.
உலக தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்றதுடன், அவரே பல மூலிகை மாநாடுகளையும், கண்காட்சிகளையும் நடத்தி மக்களிடையே சித்த மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தனது தமிழ் பேச்சாளும், எழுத்தாளும், பல்லாயிரம் வாசகர்களை கொண்டுள்ளார். தினமலர், தினமணி, ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, குங்குமம், கல்கண்டு வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.
இவருக்கு மனைவி திருமதி ருக்மணி, மகள்கள் டாக்டர் அபிராமி, டாக்டர் அஜிதா, மகன்கள் டாக்டர் பாலாஜி, டாக்டர் பாரதிராஜா, பேரன்கள், பேத்திகள் உள்ளனர்.
தொடர்புக்கு:
மூலிகைமணி டாக்டர் க.வேங்கடேசன் குடும்பத்தினர்
பிளாட் எண்.9, பிபிசி மேனார், 23, துரைசாமி சாலை,
தி.நகர், சென்னை - 600 017.
போன்: 90030 31796, 90947 77999