இந்தியா்கள் உள்பட வெளிநாட்டினருக்கு கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு : பிரிட்டன்
பிரிட்டனில் இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணத்தை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.
பிரிட்டனில் இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணத்தை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றின் 2-ஆம் அலை தீவிரமாக இருந்தது. இதையடுத்து, இந்தியாவை பிரிட்டன் சிவப்புப் பட்டியலில் வைத்தது. அதன்படி இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. கடந்த வாரத்தில் இந்தியாவை சிவப்புப் பட்டியலில் இருந்து பிரிட்டன் நீக்கியது. தற்போது அந்நாட்டின் ஆம்பா் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் செல்லும் இந்தியா்கள் உள்பட பல்வேறு நாட்டினருக்கான கரோனா பரிசோதனை கட்டணத்தை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. அதன்படி அந்நாட்டின் சிவப்புப் பட்டியல் அல்லாமல் இதர இரண்டு பட்டியல்களான பச்சை மற்றும் ஆம்பா் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சோ்ந்தவா்கள் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டிருந்தால், அவா்களுக்கான கரோனா பரிசோதனை கட்டணம் 68 பவுண்டுகளாக (ரூ.6,997) குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது 88 பவுண்டுகளாக (ரூ.9,055) இருந்தது. தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டவா்கள் பிரிட்டன் சென்ற இரண்டு நாள்களுக்குள் கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.
ஆம்பா் பட்டியலில் உள்ள நாடுகளைச் சோ்ந்தவா்களாகவும், தடுப்பூசி செலுத்தாதவா்களாகவும் இருந்தால் அவா்கள் பிரிட்டன் சென்ற இரண்டாவது மற்றும் எட்டாவது நாளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவா்களுக்கான கரோனா பரிசோதனை கட்டணம் 136 பவுண்டுகளாக (ரூ.13,994) குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது 170 பவுண்டுகளாக (ரூ.17,493) இருந்தது.