முகப்பு
தமிழ்நாடு

கம்பம்மெட்டு வழியாக தோட்டத் தொழிலாளர்கள் கேரளத்துக்கு வேலைக்குச் செல்ல அனுமதி

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு முறையான கரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் ஆண், பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை வேலைக்குச் சென்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
கம்பத்திலிருந்து கம்பமெட்டு வழியாக கேரளத்துக்குச் சென்ற ஏலத்தோட்ட தொழிலாளர்கள்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு முறையான கரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் ஆண், பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை வேலைக்குச் சென்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்ல கம்பம்மெட்டு குமுளி மலைச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்வார்கள்.

கரோனா பரவல் காரணமாக வேலைக்குச் செல்ல கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ், சளி பரிசோதனை செய்துகொண்டு நெகடிவ் சான்றிதழ் பெற்றவர்கள் கேரளத்துக்குள் செல்லலாம் என்று கேரள அரசு அனுமதி வழங்கியது.

ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள் சோதனைகள் செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் செய்தனர், ஆனாலும் கேரள சோதனைச் சாவடியில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

சனிக்கிழமை கம்பத்திலிருந்து 3 ஜீப் வாகனங்களில் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர்.

அவர்கள் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ், சிலர் சளி பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் போன்றவைகளை வைத்திருந்தனர். அதை ஆய்வு செய்த கேரள கம்பம்மெட்டு சோதனைச்சாவடி போலீசார் அவர்களை வேலைக்கு செல்ல அனுமதி அனுமதி அளித்தனர். 3 ஜீப் வாகனங்களில்  25 பேர் வேலைக்குச் சென்றனர்.

இது பற்றி  கம்பம்மெட்டு காவல் நிலைய ஆய்வாளர் ராபர்ட் ஜானி கூறியது: இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது சளி பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இ- பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கேரளத்துக்குச் செல்ல எவ்வித தடையும் செய்வதில்லை. உரிய  சான்றிதழ் இல்லாதவர்களை மட்டும் திருப்பி அனுப்பி வைக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.