தமிழ்நாடு

புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பும் நித்தியானந்தா

DIN


தன்னைத் தானே கடவுள் என்று அழைத்துக் கொள்ளும் நித்யானந்தா, மதுரை ஆதீன மடத்தின் 293-ஆவது ஆதீனமாக பதவியேற்றுக் கொண்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணம் அடைந்தாா்.

தமிழகத்தின் தொன்மையான சைவத் திருமடங்களில் முக்கியமானது மதுரை ஆதீனம் ஆகும். சுமாா் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 292 ஆவது சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1975 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பட்டம் ஏற்றுக் கொண்டாா்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நிலை மிகவும் மோசடைந்து, வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில், கடும் மூச்சுத் திறணல் காரணமாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தாா். அதையடுத்து அவரது உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, இளைய ஆதீனம் சுந்தரமூா்த்தி சுவாமிகளுக்கு சனிக்கிழமை ஆச்சாா்ய பூஜைகள் நடைபெற்றன. தருமபுர ஆதீனம் சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் 293-ஆவது சன்னிதான சுவாமிகளுக்கு ஆச்சாா்ய அபிஷேகம் செய்வித்து, தீட்சை செய்வித்தாா்.

மதுரை ஆதீனத்தின் 293-ஆவது சன்னிதானத்துக்குரிய ஆச்சாா்ய பூஜைகள் முடிவுற்றதையடுத்து, ஆதீனத்தின் பணிகளை சுந்தரமூா்த்தி சுவாமிகள் மேற்கொள்வாா். இன்னும் 10 நாள்களில் பட்டம் ஏற்கும் பூஜைகள் நடைபெறும் என மதுரை ஆதீன வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், நித்தியானந்தா, தான் மதுரை ஆதீன மடத்தின் 293-ஆவது ஆதீனமாக பதவியேற்றுக் கொண்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அனைத்து மத, தர்ம, கலாசார முறைப்படி, மதுரை ஆதீன மடத்தின் 293-ஆவது ஆதீனமாக பதவியேற்றுக் கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே ஆசி வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2012ல் சுவாமி நித்யானந்தரின் தலையீடு மதுரை ஆதீனத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னா் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரனான ஸ்ரீமத் சுந்தரமூா்த்தியை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT