தமிழ்நாடு

பெண்களும் அர்ச்சகராகலாம் திட்டத்தைக் கொண்டு வர திருமாவளவன் வலியுறுத்தல்

DIN

திருச்சி: தமிழகத்தில் பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியது, அனைத்து சாதியினரும்  அர்ச்சகராகலாம் என்பது  இந்தியாவில் மாபெரும் சமூகப் புரட்சியாகும்.

இந்தியாவிற்கு வழிகாட்டு முயற்சியாக புரட்சிகரமான நடவடிக்கையை திமுக மேற்கொண்டுள்ளது.  தமிழக முதல்வருக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அனைத்து இந்துக்களும் அர்ச்சகராகலாம் என்பதுதான் இதன் பொருள்.

ஆனால் இதனை எதிர்த்து பலரும் கூச்சலிடுகிறார்கள். இந்துக்கள் அல்லாத யாரும் அர்ச்சகராக முடியாது.  அவ்வாறு ஒருவரும் நியமிக்கப்பட வில்லை. ஆனால் இதை ஏற்க மறுத்து கடுமையான விமர்சனங்களை சிலர் முன்வைக்கின்றனர்.  நீதிமன்றத்திற்கு செல்வோம் என மிரட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்.

தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும். இணையவழியில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இந்தியா முழுவதும் 21 கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் இரண்டு கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி தலைவர்களின் உரையாடல்களை கண்காணித்து உள்ளனர். மோடி அரசு  சமூகநீதிக்கு எதிராக திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி வருகிறது.

இதனை தடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு சார்பில் 1995-க்குப் பிறகு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கூட்டங்கள் நடத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழக முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெற்று இருப்பது வரவேற்கத்தக்கது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக பயன்படுத்துவதற்கு முதல்வர் ஆணையிடுவார்  என உறுதியாக நம்புகிறோம்.

சமூகங்களை ஒன்று சேராமல் திட்டமிட்டு இந்திய அரசு தடுத்து வருகிறது. சாதி உணர்வுகள் மதவெறிக்கு  அடிப்படையாக அமையும் என்ற நோக்கில் திட்டமிட்டு மோடி அரசு காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கு யாரும் இரையாகக் கூடாது. தமிழகத்தில் உள்ள  25  ஜாதிகள் மத்திய அரசு பட்டியலில் இடம்பெறவில்லை. இதில் இடம் பெற வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது. இதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டினை 50 சதவீதத்திற்கு மேல் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தகர்த்தெறிய வேண்டும். 50 சதவீத உச்ச வரம்பு சட்டத்தை  நடைமுறைபடுத்தக்கூடாது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தான் தற்போது தலையாய பணியாக உள்ளது. பிரதமர் யார் என்பது முதன்மையான சவாலாக இல்லை. மருத்துவர் ராமதாஸ் நேரத்திற்கு ஒன்று பேசுகிறார் அவரது கருத்தில் அவர் நிலையாக நின்றால் சரி.
கொடநாடு வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் பதற வேண்டும்? அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அவர்கள் அச்சப்பட  தேவையில்லை.

இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-சிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவது அவர்கள்  இருவரின் கடமையாகும் என்றார்.

மேலும் பேசுகையில் தமிழகத்தில் பெண்களும் அர்ச்சகராக வேண்டும் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT