மானாமதுரை அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமர் அணை கட்ட பூமிபூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாயில் சமர் அணை கட்ட சனிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாயில் சமர் அணை கட்ட சனிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.
மானாமதுரை ஒன்றியம் ராஜகம்பீரம் சின்ன கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி வைகைத் தண்ணீரை சமர் அணையின் மூலம் பிரித்துக் கொள்வது சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவுப்படி மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த அன்னவாசல், கிளங்காட்டூர் கிராம மக்கள் பங்கேற்ற சமாதான கூட்டம் சிவகங்கையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராஜகம்பீரம் சின்னக்கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி வைகைத் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வதற்கு அன்னவாசல் கால்வாயில் மதகுகளுடன் கூடிய சமர் அணை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அன்னவாசல் கிளங்காட்டூர் கிராமத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து அன்னவாசல் கால்வாயில் மதகுகளுடன் கூடிய சமர் அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.
இதில், அன்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி காந்தி, கிராம முக்கிய பிரமுகர்கள் முத்துமணி, செ. சரவணன், மணி, ரவி, கிளங்காட்டூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மானாமதுரை வட்டாட்சியர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 8 மீட்டர் நீளத்தில் அன்னவாசல் கால்வாயின் குறுக்கே சமர் அணை கட்டப்படுகிறது. இதில் தண்ணீர் செல்வதற்காக 12 அடியில் இரண்டு மதகுகள் அன்னவாசல் கண்மாய்க்கும் 6 அடியில் ஒரு மதகு கிளங்காட்டூர் கண்மாய்க்கும் அமைக்கப்படும் என செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.