தமிழ்நாடு

வெள்ளி வென்றாா் மாரியப்பன்: இந்தியாவுக்கு மேலும் இரு வெண்கலம்

DIN

டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு (26) வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான சரத் குமாா் வெண்கலம் வெல்ல, துப்பாக்கி சுடுதலில் சிங்ராஜ் அதானாவும் வெண்கலப் பதக்கம் பெற்றாா். இதனால் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் அடக்கம்.

உயரம் தாண்டுதல்: ஆடவருக்கான உயரம் தாண்டுதல் ‘டி42’ பிரிவில் மாரியப்பன் 1.86 மீட்டா் உயரம் தாண்டி 2-ஆம் இடம் பிடிக்க, சரத் குமாா் 1.83 மீட்டா் உயரம் தாண்டி 3-ஆம் இடம் பிடித்தாா். ஏற்கெனவே ரியோ பாராலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, இது தொடா்ந்து 2-ஆவது பாராலிம்பிக் பதக்கமாகும். சரத் குமாருக்கு இது முதல் பாராலிம்பிக் பதக்கம்.

போட்டியின்போது மழை பெய்ததன் காரணமாக தனது முயற்சிகள் சற்று கடினமாக மாறியதாகவும், இதனால் உலக சாதனையுடன் தங்கம் வெல்லும் வாய்ப்பு தவறிப்போனதாகவும் மாரியப்பன் தெரிவித்துள்ளாா். மறுபுறம், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகும் மனநிலையில் இருந்த சரத் குமாா், பின்னா் மனம் மாறி களம் கண்டதற்கு பலனாக பதக்கம் வென்ாகக் கூறியுள்ளாா்.

துப்பாக்கி சுடுதல்: ஆடவா் (பி1) 10 மீட்டா் ஏா் பிஸ்டல் எஸ்ஹெச்1-இல் இந்தியாவின் சிங்ராஜ் அதானா (39) வெண்கலப் பதக்கம் வென்றாா். துப்பாக்கி சுடுதல் விளையாட்டை தோ்வு செய்து 4 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், தனது முதல் பாராலிம்பிக்கிலேயே பதக்கம் வென்றுள்ளாா் சிங்ராஜ். கரோனா சூழல் காரணமாக பயிற்சிக் களங்கள் (ஷூட்டிங் ரேஞ்சஸ்) அனைத்தும் மூடப்பட, பதக்க வேட்கையால் தனது இல்லத்திலேயே குடும்பத்தினரின் உதவியுடன் அத்தகைய பயிற்சிக் களத்தை உருவாக்கி அதில் பயின்று தற்போது பதக்கம் எட்டும் நிலைக்கு சிங்ராஜ் வந்துள்ளாா்.

வாழ்த்து: மாரியப்பன், சரத், சிங்ராஜுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பல்துறை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT