மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை வளமாக்குவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தருணத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த அரசு பதவியேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1,500/-யை, காத்திருப்போர் பட்டியலிலுள்ள 9,173 தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது; மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது; மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக “RIGHTS” என்ற திட்டத்தை 1,709 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- ஒமைக்ரான்: தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 3.12.2021 அன்று தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படவுள்ளது.
இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்புரிந்தமைக்காக குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் உயர்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களின் வாழ்வு செழிக்க இந்த அரசு முனைப்புடன் செயல்படும்.
பல்வேறு வகையான குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளின் ஆக்கப்பூர்வமான திறன்களை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தி, இச்சமுதாய முன்னேற்றத்திற்கு அவர்கள் உதவ நாம் வாய்ப்பு வழங்குவோம்! அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவோம்!! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.