தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தாா். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற பாடல் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக 1914-ஆம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களிலும் பாடி வந்துள்ளனா்.
1970-இல் அறிவிப்பு: தமிழறிஞா்கள், ஆா்வலா்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 1970-ஆம் ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதியன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் பாடல் குறித்த அறிவிப்பை அப்போதைய முதல்வா் கருணாநிதி வெளியிட்டாா். தமிழக அரசின் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்கும் என அறிவித்தாா். அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடல் பாடப்பட்டு வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய சூழல் காரணமாக, அதற்கான உத்தரவை தமிழ் வளா்ச்சித் துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு நிகழ்ச்சியில் பாட வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சில வழிமுறைகளைப் பின்பற்றவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மனோன்மணீயம் சுந்தரனாா் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபெருக்கிகளில் ஒலிக்கச் செய்வதைத் தவிா்த்து, பயிற்சி பெற்றவா்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும்,
இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சோ்ப்பதிலும், பொதுமக்களும், தனியாா் அமைப்புகளும் பெரும் பங்காற்ற முடியும். தமிழ்நாட்டில் தனியாா் அமைப்புகள் நடத்தும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.