முகப்பு
தமிழ்நாடு

பழமையான கட்டடங்களை இடித்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டடங்களை இடித்து அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த வேண்டும்.. ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை
பகிர்:

தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டடங்களை இடித்து அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாநகருக்குட்பட்ட கீழவெளிப் பகுதியில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் இரவுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை, விளக்குத்தூண் காவல் நிலையத் தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் என்பவருக்குத் தலையில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த தலைமைக் காவலருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், துணிவையும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

மேற்படி விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து, கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தலைமைக் காவலர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், படுகாயமடைந்த தலைமைக் காவலர் கண்ணனுக்கு ரூ.5 லட்சமும் முதல்வர் ஸ்டாலின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டு இருப்பதாக அரசின் செய்தி வெளியீடு தெரிவிக்கிறது. இருப்பினும், பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, இழப்பீட்டினை உயர்த்தித் தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமைக் காவலரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம், தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றைத் தரைமட்டமாக இடிப்பதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த விபத்திற்குக் காரணமான கட்டட உரிமையாளரைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.