முகப்பு
தமிழ்நாடு

வழக்குகளை நேரடியாக விசாரணை செய்ய உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் பிப்ரவரி 8}ஆம் தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்ட அறிவிக்கையில், கரோனா தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்குகளை நேரடியாக விசாரிக்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நேரடி வழக்கு விசாரணையைப் பொருத்த வரை இறுதி விசாரணை வழக்குகள் மட்டும் காலை,மாலை என இரு நேரங்களிலும் விசாரிக்கப்படும்.

மற்ற வழக்குகள் காணொலி காட்சி மூலம் மட்டுமே நடைபெறும். உயர்நீதிமன்ற பதிவுத்துறை உள்ளிட்ட மற்ற பிரிவுகளில் கூட்டமாக கூட அனுமதி இல்லை. ஒரு நேரத்தில் 5 வழக்குரைஞர்கள் அல்லது குமாஸ்தாக்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வழக்குகளில் ஆஜராக வரும் வழக்குரைஞர்கள், மனுதாரர்கள், குமாஸ்தாக்கள் கட்டாயமாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

நீதிமன்ற அறைகளை பொருத்த வரை ஒரு மணி நேரத்துக்கு 5 வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் இரண்டு தரப்பிலும் தலா ஒரு வழக்குரைஞர்கள் வீதம் நீதிமன்ற அறையின் பரப்பளவைப் பொருத்து 6 முதல் 10 வழக்குரைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்ற வழக்குரைஞர்கள் பதிவுத்துறை ஒதுக்கியுள்ள இடத்தில் காத்திருக்க வேண்டும்.

வழக்கு முடிந்த பின்னர், நீதிமன்ற அறையின் வெளியே காத்திருக்காமல் வெளியேற வேண்டும். வழக்கு ஆவணங்களை நீதிமன்ற அறைக்குள் குமாஸ்தாக்கள் கொண்டு வர மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆவணங்களை கொடுத்தவிட்ட பின்னர் அறையில் இருந்து வெளியேறிவிட வேண்டும்.

உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும், வழக்குத் தாக்கல் செய்யும் போது போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறையைப் பொருத்தவரை தூய்மைப்பணிகள், கிருமி நாசினி தெளிப்பதற்கு மட்டுமே திறக்கப்படும்.

நிரந்தரமாக திறப்பது குறித்து பிப்ரவரி இறுதி வாரத்தில் முடிவு செய்யப்படும். உணவகங்களைப் பொருத்த வரை அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி திறந்துகொள்ள அனுமதி வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது

முழு கட்டுரையைப் படிக்க →