முகப்பு
தமிழ்நாடு

கறுப்பர் கூட்டம்  சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம்  சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம்  சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரின்படி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுரேந்திரன்,செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா, செந்தில்வாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில், கலாசாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும்,   கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை தரப்பில் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்ததற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கக்கூடாது என விதிகள் இல்லை. கறுப்பர் கூட்டத்தினரின் செயல்பாடு குறிப்பிட்ட மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி, கடும் எதிர்ப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்,  குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில்
இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ஒரே வழக்குக்காக குண்டர்சட்டம் போடப்பட்டதை எதிர்த்து உள்துறை செயலாளரிடம் அளித்த மனு மீது உரிய காலத்தில் முடிவெடுக்கவில்லை எனவே  விடுதலை செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →