விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம்: அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தங்களது போராட்டத்தின் வலிமையை மீண்டும் பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் நடத்தி வருகின்றன.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியிருக்கும் இந்த போராட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில், சென்னை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா சாலையில் நடந்து வரும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரத்திலும் விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.