நெல்லை காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கையெழுத்திட வந்தவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (45). தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனின் கீழ் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களாக கையெழுத்திட்டு வந்தார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் கையெழுத்திட காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு 2 குண்டுகள் விழுந்து வெடித்தன. குண்டு வீச்சில் இருந்து கண்ணபிரானும், அவரது ஆதரவாளர்களும் காயங்களின்றி தப்பினர். மர்ம நபர்களை போலீஸார் துரத்த முயன்றபோது மேலும் ஒரு குண்டு வீசியபோது திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் விழுந்து வெடித்தது. மேலும், ஒரு குண்டு வெடிக்கவில்லை. இதனால் சத்திரம்புதுக்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர். அப்போது வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டைக் கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். மேலும், வெடித்தவை நாட்டு வெடிகுண்டுகள் எனவும், அதில் கருங்கல் துகள்கள், சிறிய இரும்பு குண்டுகள் ஆகியவை இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வெடிகுண்டு வீச்சில் இருந்து தப்பிய கண்ணபிரான் கூறுகையில், ஏற்கெனவே என் மீதும், எனது அமைப்பினர் மீதும் தாக்குதல் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைப் பிடிக்காமல் சிலர் இதுபோன்று செய்து வருகிறார்கள். காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவல் துணை ஆணையர் சரவணன் கூறுகையில், தச்சநல்லூரில் நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரு நாள்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.