முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் அமைதி வழிப் போராட்டம்

கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து புதன்கிழமை அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சங்கச் செயலாளர் சைஃப் அன்வர் தலைமையில் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய பல் மருத்துவ சங்கத்தினர்.
பகிர்:


மயிலாடுதுறை: கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து புதன்கிழமை அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு சமீபத்தில் கலப்பு மருத்துவ முறையை அனுமதித்துள்ளது. இந்த மருத்துவ முறைக்கு அலோபதி மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கலப்பு மருத்துவ முறையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாகை மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கச் செயலாளர் சைஃப் அன்வர் தலைமையில் பங்கேற்ற மருத்துவர்கள் அரை மணி நேரம் அமைதியாக நின்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆயுர்வேத, சித்த, யுனானி பிரிவுகளைக் கொண்ட மத்திய இந்திய மருத்துவக் குழுமம் கடந்த 19.11.2020-இல் ஒரு வர்த்தமானி மூலமாக ஆயுர்வேத மேற்படிப்புக்கான ஒழுங்குமுறையை வெளியிட்டது. 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை 'சால்ய தந்திரம்" என்று பட்டியலிட்டு, இந்த சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்கள் செய்ய அனுமதித்தது.

இந்த அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தைச் சார்ந்தது. எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்குப் பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் பற்றிய போதிய அறிவும் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை செய்வது சாத்தியம் அல்ல. அப்படிச் செய்தால் நமது மருத்துவ சேவையில் பெரிய பாதிப்பும் நோயாளிகளின் சிகிச்சையில் பெரிய குளறுபடிகளும் நேரும்.

அனைத்து மருத்துவ முறைகளை கலப்பதால் நோயாளிகள் தங்களுக்குப் பிடித்த மருத்துவமுறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து இந்த கூட்டு மருத்துவ முறையில் திணிக்கப்படுவர். எனவே, கலப்பு மருத்துவ முறையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், திரளான பல் மருத்துவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.