தமிழ்நாடு

தமிழகத்துக்கு முதல்கட்டமாக எவ்வளவு தடுப்பு மருந்து கிடைக்கும்?

DIN

தமிழகத்துக்கு முதல்கட்டமாக எத்தனை கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் ஒரு வாரத்தில் தெரியவரும் என்று சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா தொற்றுக்கு இதுவரை 8.20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே, நாட்டின் பல மாநிலங்களில் கரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்சின்’ ஆகிய மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்வதில் வெற்றி பெற்றதையடுத்து, அவற்றுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு அந்த மருந்துகள் அறிமுகமாகும்பட்சத்தில் அவற்றை முறையாக மக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதற்கென வழிகாட்டுக் குழுவும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக மருந்துகளை இருப்பு வைப்பதற்கான வசதிகள் 2,600 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது 51 இடங்களில் தடுப்பு மருந்து பதப்படுத்தும் மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பது குறித்து ஒரு வாரத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு எப்போது தடுப்பூசியை வழங்கினாலும் உடனடியாக அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு தயாா் நிலையில் உள்ளது.

அதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ள சுகாதாரப் பணியாளா்கள் பட்டியலையும், தடுப்பூசி போடப்படும் மையங்களையும் தயாா் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி வழங்க திட்டப்பட்டிருக்கும் 6 லட்சம் முன்களப் பணியாளா்களின் பட்டியலை அனுப்பியிருக்கிறோம்.

அதற்கு அடுத்தக்கட்டமாக தமிழகத்தில் முதியவா்கள், நாள்பட்ட நோய்ப் பாதிப்பு உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. தமிழகத்தில் முதியோா்கள் அதிகம் என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT