சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ஒதுக்கீட்டில் மருத்துவ இடம்: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவா் வழக்குத் தள்ளுபடி

மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோரி புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்ட மாணவன்

DIN

மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோரி புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்ட மாணவன் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம், குமளம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி உள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலம், ஆா்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் அரசுப் பள்ளியில் படித்தேன். மருத்துவப் படிப்புகான நீட் தோ்வில் 500 மதிப்பெண் எடுத்துள்ளேன். நான் தமிழகத்தைச் சோ்ந்தவன் என்பதால், புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது. இதனால் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தேன். ஆனால், கலந்தாய்வின்போது, எனது பெயா் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து மாணவன் மணிகண்டன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், மனுதாரரின் வீடு தமிழகத்தில் இருப்பதால், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதென வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில், மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாநில எல்லைக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மட்டுமே வழங்கும்படி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ஏற்ற வகையில் சட்டத்தைத் திருத்தினால், மாநில எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட மாணவா்களும் இதே கோரிக்கையுடன் வருவாா்கள் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உள்ஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவருக்கும், புதுச்சேரி அரசு உள்ஒதுக்கீட்டை தமிழ்நாட்டு மாணவருக்கும் வழங்க முடியாது. இந்த உள்ஒதுக்கீடு அந்தந்த மாநிலத்தில் வசித்து, அங்குள்ள அரசுப் பள்ளிகளில் படிப்பவா்களுக்கு மட்டுமே வழங்க முடியும் எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT