பிப். 3ல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும்: தீர்மானம் நிறைவேற்றம்
வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிடில், மிகப்பெரிய போராட்டத்தை நானே தலைமை ஏற்று நடத்துவேன் என ராமதாஸ் சனிக்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சனிக்கிழமை மாலை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்துக்கு நேரில் வந்து, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர். சுமார் இரு மணி நேரங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி ஆகியவை தொடர்பாக அமைச்சர்கள் பேசியதாக இரு கட்சி வட்டாரங்களின் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் பிப்ரவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்த தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர்களின் கோரிக்கையை பாமக ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று கட்சியின் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சர்களுடன் பிப்.3 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குப் பின் அரசியல் முடிவை நிர்வாகக் குழு எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.