முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்டம் இடுவாயில் உள்ள சிறு மருத்துவமனை வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையினர் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமானது மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையிலும், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

''போலியோ  எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் ஒரே நாளில், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் 1,154  மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 5 மணி வரையில் 1 முதல் 5 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த முகாமில், மாவட்டம் முழுவதும் உள்ள 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல, 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தப் பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 4,780 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர். இதன் தொடக்கவிழாவில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.