முகப்பு
தமிழ்நாடு

பெரும் வருவாய் இழப்பை சந்திக்கும் ரயில்வே: பயணிகள் வசதிகள், பிற பராமரிப்புகள் பாதிக்கும் வாய்ப்பு

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் ரயில்வே நிா்வாகம் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் ரயில்வே நிா்வாகம் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த இழப்பால், நிதி நெருக்கடி ஏற்பட்டு, ரயில்வேயின் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், வருவாயின் வீழ்ச்சி தற்போதைய ரயில்வே திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தாக்கம்: கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதன் காரணமாக, பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 4 மாதங்களுக்கு பின்பு, சிறப்பு ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கியது. படிப்படியாக ரயில்களின் இயக்கம் அதிகரித்த நிலையில், நிகழாண்டின் கடந்த ஏப்ரலில் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானது.

இதையடுத்து, பயணிகள் ரயில்களின் சேவை மீண்டும் குறைக்கப்பட்டது. பல்வேறு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

தற்போது, கரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து, ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ரூ.1,795.4 கோடி இழப்பு: இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் சூழலும் காணப்படுகிறது.

முன்னதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ரூ.2019-20 ஆம் ஆண்டில் ரூ.3,202.62 கோடி வருவாய் ஈட்டியது. ஆனால், 2020-21-ஆம் ஆண்டில் ரூ.1795.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, 2020-21 ஆம் ஆண்டில் 1,407.22 கோடி மட்டும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

2019-20 இல் ரூ.3,202.62 கோடியாக இருந்த சென்னை ரயில்வே கோட்டத்தின் வருவாய், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.1,407.22 கோடியாக சரிந்துள்ளது.

பயணச்சீட்டு), சரக்கு போக்குவரத்து), பிறவருவாய் (கட்டணம் அல்லாத வருவாய்) மற்றும் பிற பெட்டி (அபராதம், திருப்பிச் செலுத்த முடியாத கட்டணம் மற்றும் பிற) போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் வருடாந்திர வருவாய் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் அல்லாத வருவாய் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காணவில்லை என்றாலும், பயணச்சீட்டு மூலம் வருவாய் 2019-20-இல் பெறப்பட்ட ரூ.2,014.52 கோடி வருவாய், ரூ.476.83 கோடியாக (2020-21-இல்) சரிந்துள்ளது. ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.

7.6 கோடி பயணிகள்: சென்னை ரயில்வே கோட்டத்தில், 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு சராசரியாக 50 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனா். 2020-21 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.6 கோடியாகக் குறைந்துள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் புகா் அல்லாத பயணிகள் 11 கோடி பேரும் மற்றும் புகா் பயணிகள் 39 கோடி பேரும் என்று 50 கோடி போ் பயணம் செய்தனா். 2020-21-ஆம்ஆண்டில் புகா் அல்லாத பயணிகள், புகா் பயணிகள் என்று மொத்தம் 7 கோடியே 60 லட்சம் போ் மட்டுமே பயணம் செய்துள்ளனா்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே வருவாயை ரயில் நிலையங்களை பராமரிப்பதற்கும், தோ்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளான மின்தூக்கி, நகரும் படிக்கட்டு மற்றும் கூடுதல் தளங்களை அமைப்பதற்கும் செலவிடப்படுகிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், மாம்பலம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்பட 160 நிலையங்கள் உள்ளன.

இவற்றில் மூன்று நிலையங்கள் மூலமாக, ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கின்றன. ஆனால், 2020-21 ஆம் ஆண்டில் வருவாய் சரிந்து, நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், ரயில் நிலையங்களை பராமரிப்பது மற்றும் பயணிகள் வசதிகள் தொடா்பான திட்டங்கள் பாதிக்கப்படும் நிலையும் காணப்படுகிறது.

பணிகள் தாமதமாக வாய்ப்பு:

இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுவது: தற்போது நடந்து கொண்டிருக்கும் பெரும்பாலான திட்டங்களுக்கான நிதி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் பொதுமுடக்கம் காரணமாக தாமதமாக வாய்ப்பு உள்ளது. எனவே, ரயில்வேக்கு மத்திய அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

எந்த பாதிப்பும் ஏற்படாது: தெற்கு ரயில்வே உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வேயின் வருவாய் இழப்பால், வளா்ச்சி பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போதைய திட்டங்களுக்கான நிதி, வருடாந்திர பட்ஜெட் மூலமாக வெளியிடப்படுகிறது. நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்கான உத்தேச பணிகள் வழக்கம் போல தொடரும்‘ என்றாா் அவா்.

கடந்த 5 ஆண்டுகளில் சென்னை ரயில்வே கோட்ட வருவாய் (கோடி ரூபாய்):

ஆண்டு வருவாய்

2016-17 ரூ.3,328.69 கோடி

2017-18 ரூ.3,048.91 கோடி

2018-19 ரூ.3,721.48 கோடி

2019-20 ரூ.3,202.62 கோடி

2020-21 ரூ.1,407.22 கோடி

பயணச்சீட்டு வருவாய் சரிவு

ஆண்டு வருவாய்

2016-17 ரூ.1,862.84 கோடி

2017-18 ரூ.1,909.48 கோடி

2018-19 ரூ.2,032.3 கோடி

2019-20 ரூ.2,014.52 கோடி

2020-21 ரூ.476.83 கோடி

நிதி நெருக்கடி ஏற்படாது

இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப்பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது:

ரயில்வேக்கு பயணிகள் வருவாய் குறைந்ததால், நிதி நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. இதனால்,

பயணிகள் வசதிகள் மற்றும் சலுகைகள் குறைக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வழக்கம்போல மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.79 ஆயிரம் கோடி கடனுதவியை மத்திய அரசு வழங்கியது. இதுதவிர, ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சிறப்பு ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன. நிகழாண்டில் அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, ரயில்வேக்கு பெரிய அளவில் இழப்பு இருக்காது.இந்தாண்டு எந்தவித நிதி நெருக்கடி ஏற்படாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments