முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: பாசன வாய்க்காலை அடைப்பது குறித்து சமாதானக் கூட்டத்தில் முடிவு

கூத்தாநல்லூர் வட்டத்தில் வெள்ளையாற்று தலைப்பின் பாசன வாய்க்கால் பிரச்னை இரு தரப்பினருக்கிடையே கிராமப் பிரச்னையாக உருவாறியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானப் பேச்சு
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் வெள்ளையாற்று தலைப்பின் பாசன வாய்க்கால் பிரச்னை இரு தரப்பினருக்கிடையே கிராமப் பிரச்னையாக உருவாகியது. இதனை முன்னிட்டு, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 

வெள்ளையாற்று தலைப்பிலிருந்து சித்தனக்குடியின் உள்கிராமமான வேளுக்குடி பாசன வாய்க்கால் (ஏ. சேனல்), மேலராதாநல்லூர் வருவாய் கிராமம், தென்பாதியின் உட்கிராமமான பனங்குடி வழியாகச் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலின் மூலமாக விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்காலை வேளுக்குடி தரப்பினர் அடைக்கக் கூடாது எனவும், பனங்குடி தரப்பினர் பாசன வாய்க்காலை அடைக்க வேண்டும், அடைத்தால்  பாசன வாய்க்காலில் தண்ணீர் வரும், விவசாயம் செய்ய முடியும் எனவும் விவாதம் செய்துள்ளனர்.

கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றோர்.

சித்தனக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தெ.தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில்,மேலராதாநல்லூர்,வேளுக்குடி உள்ளிட்ட இரு தரப்பினரையும் அழைத்து சனிக்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு, வட்டாட்சியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மேலராதாநல்லூர் தரப்பிலிருந்து கலியமூர்த்தி, இளையராஜா, சேகர், நடராஜன், வீரையன், முத்துசாமி மற்றும் அறிவு, வேளுக்குடி தரப்பிலிருந்து சரவணன், பிரபாகரன், ந.கோவிந்தசாமி, ப.சிவாஜி மற்றும் பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

இரண்டு மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மேல ராதாநல்லூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பனங்குடி கிராமத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதை, காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, அதாவது ஐந்தரை மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மீதியுள்ள நேரங்களில் வேளுக்குடி கிராமத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் யாரும் வாய்க்காலை அடைக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. 

இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு, சமாதானத்துடன் கையெழுத்திட்டனர். சமாதானப் பேச்சுவார்த்தையில், கூத்தாநல்லூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் இளமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.