முகப்பு
தமிழ்நாடு

தாராபுரம் அருகே இளைஞர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்

தாராபுரம் அருகே இளைஞரை கொலை செய்த நபர்களைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
தாராபுரம் அருகே இளைஞரைக் கொலை செய்த நபர்களைக் கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
பகிர்:

திருப்பூர்: தாராபுரம் அருகே இளைஞரை கொலை செய்த நபர்களைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அடுத்துள்ள விராச்சிமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் கோபிநாத்(21). இவர் அதே பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், கோபிநாத் தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் உப்பாறு அணையை அடுத்த மடத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் கோபிநாத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் தாராபுரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கோபிநாத்தின் சடலத்தை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்த அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்: இதனிடையே, கோபிநாத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அவரது உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துமனை முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக தாராபுரம்-கரூர் சாலையில் சில நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.