முகப்பு
தமிழ்நாடு

கொல்லிமலை வல்வில் ஓரி விழா ரத்து

கரோனா பரவல் காரணமாக, கொல்லிமலையில் ஆக.2, 3-இல் நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

நாமக்கல்: கரோனா பரவல் காரணமாக, கொல்லிமலையில் ஆக.2, 3-இல் நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி, ஆக.2,3-ஆம் தேதியன்று வல்வில் ஓரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு துறை சார்ந்த நிகழ்ச்சிகளும், கண்காட்சி அரங்குகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால் வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் முக்கிய சமுதாய தலைவர்கள்கொல்லிமலை சென்று வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வழங்கப்பட்டது.

நிகழாண்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, ஆக.2, 3-இல் இல் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கொல்லிமலையில் ஆடி மாதம் 17, 18 ஆகிய நாள்களில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், வில்வித்தை போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படமாட்டாது.

எனவே, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு மேற்கண்ட நாள்களில் வர வேண்டாம்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை மீறி வருவோர் மீது கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.