முகப்பு
தமிழ்நாடு

டெங்கு சிகிச்சையில் 55 போ் மட்டுமே உள்ளனா்

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 55 போ் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 55 போ் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். நிகழாண்டில் இதுவரை 2,130 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதிசெய்யப்பட்டதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019 ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8,527 போ் அக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனா்.

அதேவேளையில், 2020-இல் டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஆண்டில், தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், நிகழாண்டில் கடந்த 7 மாதங்களாக 2,130 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, ஜிகா, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. தற்போது மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 55 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மழை பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயா், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீா் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகக்கூடும். அதனால், அந்த பொருட்களை உடனடியாக அற்ற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →