குமுளி மலைச்சாலையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதன்கிழமை குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் ஆய்வு நடத்தினர்.
கம்பம்: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதன்கிழமை குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் ஆய்வு நடத்தினர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் குறிப்பாக மலைச்சாலைகளில் இயற்கை சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ராணிப்பேட்டை பட்டாலியனைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வாளர் கணேஷ் பிரசாத் தலைமையில் 21 வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் மழைக் காலங்களில், பாறை, மண் போன்றவைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து அதனை முன்கூட்டி தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு அறிக்கை தயார் செய்தனர்.
மேலும் மலைச்சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளையும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இவர்களுடன் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர் ஹெச்.செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் சென்றனர்.