சுருளி அருவியில் குளிக்கத் தடை: செயற்கை அருவி உருவாக்க முடிவு
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் புலிகள் காப்பகத்தினர் குளிக்க தடை விதித்து இருப்பதால், செயற்கை அருவி மூலம் பக்தர்கள் குளிக்க ஏற்பாடுகள் செய்வதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தகவல் தெரிவித்தார்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் புலிகள் காப்பகத்தினர் குளிக்க தடை விதித்து இருப்பதால், செயற்கை அருவி மூலம் பக்தர்கள் குளிக்க ஏற்பாடுகள் செய்வதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தகவல் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவி, மேகமலை வன உயிரின சரணாலயமாக இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. அதன் பொருட்டு வனத்துறையினர் புலிகள் காப்பகத்தில் பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகள் எடுத்தனர்.
ஏற்கனவே கரோனா தொற்று காரணமாக சுருளி அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை உள்ளது. இதனால் சுருளி அருவியில் முன்னோர்களுக்கான தர்ப்பணம், நேர்ச்சைக்கடன்கள் செய்ய மற்றும் ஆடி, தை அமாவாசைகளில் வழிபாடுகள் செய்ய செல்லும் பொதுமக்கள் பக்தர்கள் ஏமாற்றமடைந்து திரும்பி வந்தனர்.
இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுபற்றி கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனி மணி கணேசன் கூறியது: புலிகள் காப்பகம் என்பதால் சுருளி அருவிக்கு செல்ல இனி வாய்ப்புகள் இருக்காது என்று தெரிகிறது. எனவே, கம்பம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுருளி ஆற்றில் தடுப்பணை அமைத்து, அதிலிருந்து செயற்கையாக அருவி அமைத்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது,
மேலும் சுருளி அருவி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஒன்றிய நிர்வாகத்துக்கு உட்பட்ட இடங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். துணைத் தலைவர் ரா.தங்கராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.தமிழரசன் ரேணுகா காட்டுராஜா ஆகியோர் உடனிருந்தனர்.