தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீதான சொத்து குவிப்பு வழக்கு: 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

DIN

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீதான சொத்து குவிப்பு வழக்குத் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் 26 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் (53). அதிமுக மாவட்டச் செயலாளரான இவா் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா்.

விஜயபாஸ்கா் அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமளவில் முறைகேடு நடைபெற்ாகப் புகாா் கூறப்பட்டு வந்தது. மேலும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதிலும் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது.

இதற்கிடையே விஜயபாஸ்கா், அமைச்சராக காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். இந்த விசாரணையில் விஜயபாஸ்கா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கு:

இதன் அடிப்படையில் விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். அடுத்த கட்ட நடவடிக்கையாக விஜயபாஸ்கா் மற்றும் அவா் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றும் தொடா்புடைய 26 இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனையை தொடங்கினா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள விஜயபாஸ்கா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி தலைமையில் போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையின்போது விஜயபாஸ்கா் அங்கு இருந்தாா். இதேபோல மேற்கும் மாம்பலத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம், பெருங்களத்தூரில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளா் வீடு என சென்னையில் 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

காரிலும் சோதனை: விஜயபாஸ்கா் வீட்டில் சுமாா் 15 மணி நேரம் சோதனை நடைபெற்றது. தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விஜயபாஸ்கரின் காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை செய்தனா். இச் சோதனையில், அங்கிருந்து பெரியளவில் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என விஜயபாஸ்கரின் வழக்குரைஞா் தெரிவித்தாா். இதேபோல பிற 2 இடங்களிலும் நடைபெற்ற சோதனை அடுத்தடுத்து நிறைவு பெற்றது. ஆனால் இங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.

விஜயபாஸ்கா் வீட்டில் சோதனை நிறைவு பெற்ற பின்னா், அவரது வீட்டுக்கு, முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் வந்தனா். அவா்கள், விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து பேசினா்.

ரூ.25.56 லட்சம் பறிமுதல்:

கரூரில் இருக்கும் விஜயபாஸ்கா் வீடு, அவா் நடத்தும் நிறுவனங்கள்,அவரது குடும்பத்தினா், உறவினா், நண்பா்கள் வீடுகள், அலுவலகங்கள் என 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனா். அனைத்து இடங்களிலும் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் சோதனை நடைபெற்றது. சோதனை அனைத்து இடங்களிலும் நிறைவு பெற்றது.

இது தொடா்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வியாழக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்து குவிப்பு வழக்கு கடந்த புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக அவா்களது வீடு, அலுவலகம், நிறுவனங்கள் மற்றும் அவா்கள் தொடா்புடைய இடங்கள் என 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT