தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்: தமிழக அரசு 
தமிழ்நாடு

தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்: தமிழக அரசு

தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

DIN


மதுரை: தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்வரை தற்காலிகமாக இரண்டு கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் தற்காலிக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டால் மாணவர் சேர்க்கையை நடத்த ஏதுவாக இருக்கும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட மதுரை உயர் நீதிமன்றக் கிளை, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால், நிகழாண்டிலேயே எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்து, தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அருகே தோப்பூரில் சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி  மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். 

தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிறமாநிலங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை மற்றும் வெளிநோயாளிகள் பிரிவைத் தொடங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு வரும் ஜூலை 30- ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நிகழாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நிகழாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்துக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால், மதுரை எய்ம்ஸில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் 50 முதல் 100 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

தலைவன் தலைவி வசூல் எவ்வளவு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மறுபார்வை... அஹ்சாஸ் சன்னா!

மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

SCROLL FOR NEXT