கேட்-பி நுழைவுத்தோ்வு: விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
‘கேட்-பி’ நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாம்
‘கேட்-பி’ நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) படிப்புகளில் சேருவதற்கான ‘கேட்-பி’ என்ற தேசிய நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
பயோடெக்னாலஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெற பிஇடி தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்த தோ்வுகள் ஆகஸ்ட் 14-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான மூன்று நாள்களுக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம். தோ்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.