கருப்புப் பூஞ்சைக்கு தமிழகத்தில் 17 பேர் பலி: மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சைக்கு இதுவரை 17 பேர் பலியாகியிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சைக்கு இதுவரை 17 பேர் பலியாகியிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சைக்கு பிரத்யேகமாக வெளிப்புற நோயாளிகள் பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன் கூறியது:
"கருப்புப் பூஞ்சை நோய் கண்டறிதல் தொடர்பாக வெளிப்புற நோயாளிகள் பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பரிசோதனைகளையும், பல்துறை மருத்துவ வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விரைவாக சிகிச்சை மேற்கொள்ள இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருப்புப் பூஞ்சை நோய் தொடர்பாக தொடக்க நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் என பல துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இந்தப் பிரிவில் இடம்பெறுகிறார்கள். மேற்கொண்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கும் 120 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நோய்த் தொற்றின் காரணத்தைக் கண்டறிய 13 மருத்துவ வல்லுநர்கள் குழு ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது. ஓமந்தூரார் மருத்துவமனையிலும் இதற்கான பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பூப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 17 பேர் கருப்புப் பூஞ்சையால் பலியாகியுள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களிலும் இதுபோன்ற பிரக்யேக பிரிவைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.