கரோனா தடுப்புப் பணி: உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்
கரோனா தடுப்பு பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றைத் தடுக்க வேண்டும் என திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் அறிவுறுத
திருத்தணி: கரோனா தடுப்பு பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றைத் தடுக்க வேண்டும் என திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் அறிவுறுத்தினார்.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த வாரத்திற்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டசபை தொகுதிக்களுக்கான கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இதையடுத்து திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் தலைமையில் இன்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குலசேகரன், பாபு ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், ஒன்றிய சேர்மன் தங்கதனம், துணை சேர்மன் இ.என்.கண்டிகை எ. ரவி, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன், ஒன்றிய பொறியாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் பேசியதாவது: கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், 27 ஊராட்சிகளில் பிளிச்சிங் பவுடர், லைஜால், சுண்ணாம்பு போன்ற உபகரணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்கள் கிராமங்களில் குடிநீர் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, அனைவரும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுதவிர கரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் கிராமங்களில் அறிவுறுத்த வேண்டும். கூட்டத்தில் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு குறைகள் குறித்து என்னிடம் தெரிவித்துள்ளீர்கள்.
உங்கள் குறைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். ஒன்றிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தண்டிக்கப்படுவார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றுவை ஒழிப்பதற்காக இரவு, பகலாக பாடுபட்டும், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எனவே, ஒன்றிய அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.