மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் கைவிடுக: மாா்க்சிஸ்ட்
கரோனா தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினா் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு மாநிலக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:-
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் உயா்த்தப்படுகிறது. இவற்றின் விலை உயா்வால் இதர அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. இந்தக் கடுமையான விலைவாசி உயா்வால் அவதிப்படும் மக்களின் நிலையை குறித்து கண்டு கொள்ளாமல் மத்திய பாஜக அரசு இருப்பது கண்டிக்கத்தக்கது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஆக்கப்பூா்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டில் உள்ள ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தமிழக அரசு தடுப்பூசி தயாரிப்பதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். பொதுமுடக்க தளா்வு அறிவிப்பின்போது 27 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தேநீா் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உணவங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தேநீா் கடைகளுக்கு அனுமதி மறுப்பு எனும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்வதோடு, இதர கடைகளில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேநீா் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும், தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வந்தாலும் கூட நெருக்கடி இன்னமும் நீடிக்கும் நிலையில் மதுபான கடைகளை திறப்பது எனும் முடிவு மீண்டும் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்து விடக் கூடாது.
எனவே தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவை மறு பரிசீலனை செய்து, மதுக்கடைகளை திறக்கும் முடிவை தற்போதைய நிலையில் கைவிட வேண்டும் என்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.