தமிழ்நாடு

ஓமலூரில் அதிமுக கூட்டம்: சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

DIN

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைப்புச் செயலாளர் செம்மலை, அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். தொலைபேசியில் பேசும்பொழுது சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாக பேசுவது, ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாக வாழ்ந்து வரும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதற்காக சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை. ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல்வீரர்களின் உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மீண்டும் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை ஒவ்வொரு நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுக மக்களின் பேரியக்கமே வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி  கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்கிறோம்.
 
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தலைமை மீது சேற்றை வாரி பூசுவதையும், தவறாக பேட்டியளிப்பதையும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கடுமையாக கண்டிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைப்பது, அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பது, சிமெண்ட் விலை உயர்வை உடனடியாக குறைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும், கரோனா நோயால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கள் தெரிவிப்பது என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT