மருத்துவர் காமேஸ்வரன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்
பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் தந்தை காமேஸ்வரன் மறைந்த செய்தி அறிந்ததும், மோகன் இல்லத்துக்குச் சென்று, மறைந்த காமேஸ்வரன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தனது ஆழ்ந்த இரங்கலையும் மோகனிடம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தந்தையும், பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்மிக்க மருத்துவருமான காமேஸ்வரன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் காமேஸ்வரன் அவர்கள் தனித்துவமிக்க காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். எண்ணற்ற இளம் மருத்துவர்களை உருவாக்கியவர்.
50 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் நற்பெயர் ஈட்டித் தந்த பெருமைக்குரியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஈடு இணையற்ற நண்பராக இருந்தவர்.
தனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தந்தையை இழந்து வாடும் காது மூக்குத் தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.