முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி: குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சங்ககிரி நல்லப்பநாயக்கன் தெரு பகுதியில் கடந்த பல நாள்களாக குடிநீர் வரவில்லையெனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

Updated On : 30 ஜூன், 2021 at 3:22 PM
சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 11வது வார்டு நல்லப்பநாயக்கன்தெரு பகுதியில் குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி பெண்கள்.
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 11வது வார்டு நல்லப்பநாயக்கன் தெரு பகுதியில் உள்ள பாறை மேடு பகுதிக்கு கடந்த பல நாள்களாக குடிநீர் வரவில்லையெனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு பேரூராட்சி அதிகாரிகளிடம்  அப்பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 11 ஆவது வார்டு நல்லப்பநாயக்கன் தெரு, பாறை மேடு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காவேரி குடிநீர், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்கள் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ளதையடுத்து குழாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தண்ணீர் வீணாக கீழே செல்கின்றன.

அப்பகுதியில்  காவேரி குடிநீர், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து செல்லும் தண்ணீர் கடந்த 20 நாள்களுக்கு மேலாக செல்லாதததால் பொதுமக்கள் கூலி வேலைகளுக்கு சரியான நேரத்திற்கு செல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement

தண்ணீரைத் தேடி நகரின் கீழ் பகுதிக்கு செல்லும்போது அங்கு தண்ணீர் பிடிப்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பாறை மேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுலகத்தை முற்றுகையிட்டு  சேதமடைந்துள்ள குழாய்களை உடனடியாக செப்பனிட்டு காவேரி குடிநீரும், ஆழ்துளை கிணற்றிலிருந்து பேரூராட்சியின் சார்பில் எடுத்து விடும் தண்ணீரும் தினசரி  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.