சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற மார்ச் 10-ம் தேதி தெற்குரதவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.14-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குவீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற மார்ச் 10-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. என நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார். நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வடமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். நாட்டியாஞ்சலியில் தேவார பன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், முன்னாள் தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத்தலைவர்கள் ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர்கள் டாக்டர் ஆர்.நாகசாமி, ஏ.சம்பந்தம், பொருளாளர் பா.பழநி, இணைச்செயலாளர் எம்.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி ரத்து: நடராஜர் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோயில் பொது தீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா இந்த ஆண்டு நடைபெறாது என தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.