100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டம்
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவர்களின் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வுத் தொடர் ஓட்டத்தைத் தொடக்கி வைத்த கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் கல்லூரி முதல்வர் டி.இசக்கிதுரை.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேவாங்கர் கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் தொடர் ஓட்ட நிகழ்ச்சியானது தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் தேசிய மாணவர்படை, நாட்டுநலப்பணித்திட்ட அமைப்பு, ஒய்.ஆர்.சி., ஆர்.ஆர்.சி. மற்றும் உடற்கல்வித்துறை சார்பாக அவ்வமைப்பைச் சேர்ந்த மாணவர்களின் தொடர் ஓட்ட நிகழ்ச்சி ஏற்பாடானது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டி.இசக்கிதுரை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்து கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர். அப்போது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய கொடியை ஏந்தியவண்ணம் முதல் 5 மாணவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு ஓடிச் சென்று அடுத்த கட்டத்திற்குத் தயாராக இருந்த 5 மாணவர்கள் குழுவிடம் கொடியை அளித்திட, அக்குழு கொடியை ஏந்தியவண்ணம் ஓடி தமக்கு அடுத்த குழுவிடம் கொடுத்தனர்.
இவ்விதமாக மொத்தம் 7 குழுவினர் அடுத்தடுத்து கொடியைப்பெற்று ஓடினர். பின்னர்அவர்கள் தங்கள் ஓட்டத்தை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுசெய்தனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் சுப்புராஜ், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் ராஜவேல், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு துறை பேராசிரியர்களும் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். ஏற்பாடுகளைக் கல்லூரியின் ஸ்வீப் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபால் செய்திருந்தார்.