தினமணி.காம் செய்தி எதிரொலி: உத்தமபாளையம் குப்பைக் கிடங்கில் வெளியேறிய புகைமூட்டம் நிறுத்தம்
தினமணி டாட் காம் செய்தி எதிரொலியால் உத்தமபாளையம் குப்பைக் கிடங்கில் வெளியேறிய புகைமூட்டம் பேரூராட்சி பணியாளர்களால் தண்ணீர் ஊற்றி நிறுத்தப்படுகிறது.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 6வது வார்டு இந்திரா நகரில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகரின் மேற்குப் பகுதியில் தண்ணீரின்றி வறண்டு கிடந்த கிணற்றை எவ்வித பாதுகாப்பும் இன்றி பேரூராட்சி நிர்வாகம் குப்பை கிடங்காக மாற்றி பொதுமக்களிடம் இருந்து பெறும் குப்பைகளை கொட்டி வருகிறது.
இந்த குப்பைக் கிடங்கில் பல மாதங்களாக வெளியேறும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்கள் பலர் மூச்சுத் திணறலால் அவதிப் படுவதால் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி இன்றியும், பாதுகாப்பு இல்லாமல் இயங்கும் குப்பைக் கிடங்கை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புகாரை தினமணி டாட் காம் செய்தியாக வெளியிட்டதை அடுத்து உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று தண்ணீர் ஊற்றி புகை மூட்டத்தை கட்டுப்படுத்தினர்.